ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்


சென்னை, பிப். 25-








மத்திய பட்ஜெட்டுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
வேளாண்மை, கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து நல்லதொரு நிதி நிலை அறிக்கையினை அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர், பிரனாப் முகர்ஜியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
விவசாயிகளுக்கு வரும் 2010-2011ஆம் ஆண்டில் மூன்று லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க் கடன்கள் வங்கிகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும், மத்திய அரசின் விவசாயிகளின் கடன் ரத்து மற்றும் தள்ளுபடி திட்டம் 30-6-2010 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பும், விவசாயிகளின் பயிர்க்கடன்களுக்காக கூடுதலாக ஒரு சதவிகித வட்டி மானியம் அளிக்கப்படும் என்று தெரிவித்திருப்பதும் போற்றத்தக்கது.
கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 552 கோடி ரூபாய் இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத் தக்க ஒரு அறிவிப்பாகும்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், நமது கோரிக்கையினையேற்று - பின்னலாடை ஏற்றுமதிக்கு பெரிதும் உதவிடும் சாயத் தொழிலுக்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவிட மத்திய அரசின் நிதி உதவியாக ரூபாய் 200 கோடி ஒரு முறை மானியம் வழங்கப்படும் என்ற மிகப் பெரிய அறிவிப்புக்காக நான் எனது நன்றியினை மத்திய அரசுக்கும் குறிப்பாக பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் சமூக நலத் திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 674 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதும் , சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்விற்கு 22 ஆயிரத்து 300 கோடி ரூபாய் - பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரம் கோடி ரூபாய் - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 40 ஆயிரத்து 100 கோடி ரூபாய் என்ற அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்று மகிழத்தக்க அறிவிப்புகளாகும்.
மேலும் தொடர்ந்து நாம் விடுத்து வரும் வேண்டுகோளையேற்று, இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்ட தற்போது அனுமதிக்கப்படும் தொகையான ரூபாய் 35 ஆயிரம் என்பது 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்திருப்பதற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய தர வகுப்பினருக்கு உதவிடும் வகையில் வருமான வரி வீதங்களைக் குறைத்து சலுகை அளித்திருப்பதும் மகிழ்ச்சியினை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.
சமூக நீதியையும், பொருளாதார வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் 2010-2011ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அளித்துள்ள மத்திய அரசுக்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துரை இடுக ...: