ராஜ பார்வை

எனது பார்வையில் படும் அனைத்தும் ராஜாங்கத்தில் இடமளிக்கப்படும்

பக்கங்கள்

பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களே

ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாயினும் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுடனும், அறுபதை தாண்டிய முதியவர்களுடனும் செலவிட்டு பாருங்கள். அந்த நாள் சிறப்பாய் அமையும் என்கிறார்கள். அவர்களிடமே நமக்கு கற்பதற்கு ஆயிரம் விஷயம் இருக்கும். ஆனால் நாம் தயங்கி அந்த நல்ல சந்தர்பங்களை நழுவ விடுகிறோம்.

பின்வரும் சம்பவம் மனித உறவுகளுக்கான கருத்தரங்கில், இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரியும் வெங்கடேஷ் பாலசுப்ரமணியம் விவரித்தது. இது தன் பெற்றோருக்கு முதல் விமான டிக்கெட் வாங்கி வந்த நிகழ்வும், அதன் பின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சி பற்றியது. இனிஅவருடைய சொந்த உணர்வுகளில், ...

அன்று என் பெற்றோர் சொந்த ஊருக்கு புறப்பட தயார் ஆனார்கள். அவர்கட்கான டிக்கெட்டை அந்த முறை JetAirways மூலம் பதிவு செய்தேன். அதற்கு முன் எனது தந்தை விமானத்தில் பயணித்தது இல்லை. டிக்கெட்டை அவர் கைகளில் கொடுத்த பொழுது முற்றிலும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த நிமிடமே குதூகலம் அவர் முகத்தில் அப்பிகொண்டது. பயணிக்கும் நொடிக்கான காத்திருப்பு, ஒரு பள்ளி சிறுவன் போல் அன்று அவர் தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

நாங்கள் அனைவரும் அன்று அவரை வழியனுப்ப அவருடன் விமான நிலையம் சென்று இருந்தோம். சுமைகளை எடுத்து செல்லும் டிராலி முதல், விமான நிலைய சோதனைகள், விமானத்தில் ஜன்னலோர சீட் என பரபரப்போடும், மகிழ்ச்சியோடும் இருந்தார். அவர் முற்றிலும் இந்த பயணத்தை அனுபவித்து செல்வது போல் இருந்தது, அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும். அவரது மகிழ்ச்சியை, இந்த அனுபவத்தை கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் விமான சோதனைக்கு செல்லும் முன் என்னை நோக்கி வந்தார். அப்படி வந்தவர் கண்களில் நன்றி பெருக்கிற்கான ஈரம் தெரிந்தது. நெகிழ்ச்சியோடு என்னிடம் தன் நன்றியை தெரிவித்தார். அந்த தருணத்தில் என் தந்தை மிக மிக உணர்சிவயப்பட்டவராய் காணப்பெற்றார். நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. அது அவருக்கு மிக பெரியதாக தோன்றியுள்ளது. நான் அவரிடம் நன்றி சொல்ல இதில் எதுவும் இல்லை என சொன்னேன்.

இந்த நிதழ்ச்சியுடன் பின்னர் என் வாழ்வை பற்றி நான் சிந்தித்து பார்த்தேன். நாம் குழந்தையாய் இருந்த தருணங்களில் நம் பெற்றோர் நம் எத்தனையோ கனவுகளை நனவாக்கி உள்ளனர். அவர்களின் அப்போதைய பொருளாதார நிலையை உணராமல், நாம் கிரிக்கெட் மட்டைகள், துணிமணிகள், 
பொம்மைகள் எனஅவ்வப்போது நச்சரித்து உள்ளோம். அவர்களின் இயலாமையிலும், நம்முடைய எல்லா தேவைகளையும், பூர்த்திசெய்திட முன்வந்துள்ளனர். நாம் எப்போதாவது, நம் பொருட்டு அவர்களின் தியாகத்தை எண்ணி உள்ளோமா? நம் விருப்பங்களுக்கு அவர்கள் எவ்வளவோ இழந்துள்ளனர்.

நாம் இதுவரை நம்பொருட்டு அவர்கள் செய்தவற்றிற்கு நன்றி செய்துள்ளோமா? நம் மகிழ்ச்சியை நன்றியை சொல்லி உள்ளோமா? அதே போல், இன்று நம் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது, நன்கொடையை பொருட்படுத்தாது நல்ல பள்ளியை தேர்ந்தெடுக்கிறோம். நம் குழந்தைகளுக்கு சிறப்பான பொம்மைகள், சிறப்பான தீம் பார்க்குகள் என பார்த்து பார்த்து செய்கிறோம்.
ஆனால் நாம் ஒன்றை முற்றிலும் மறந்து விட்டோம். நம் பெற்றோர் நம் மகிழ்ச்சிக்காக செய்த தியாகத்தை மறந்துவிட்டோம்.

ஆகவே நம்முடைய கடமை, அவர்களின் சிறிய சிறிய கனவுகளை நனவாக்க முயல்வதே. அவர்கள் இளமையில் பெற முடியாததை, அந்த சந்தோஷ தருணங்களை மீட்டு தருவதே. இவற்றை நாம் அவர்கட்கு அளித்தால் அவர்கள் வாழ்வு நிச்சயம் முழுமை அடையும்.

நிறைய தருணங்களில், என் பெற்றோர் சில கேள்விகளை கேட்பார்கள். அந்த தருணத்தில், பொறுமை இன்றி நான் பதில் சொல்லி உள்ளேன். ஆனால் அதற்கு மாறாக , இன்று என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நிறைய மரியாதையோடு பதில் சொல்லிவருகிறேன். நான் தற்போது உணர்கிறேன். என் பெற்றோர் அடைந்த வருத்தத்தை, இன்று என்னால் உணர முடிகிறது.

முதியவர்கள் அனைவரும், தம் இரண்டாவது குழந்தை பருவத்தில் உள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். இதுவும் நம் குழந்தைகளை போற்றி பாதுகாப்பது போன்றதே. அதே அக்கறையும், அதே சிரத்தையும், நம்முடைய முதிர்ந்த பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும்.

அவர்கள் பொருட்டு நேரம் ஒதுக்குவதும், பணிவோடு பதில் சொல்வதும், அவர்கட்கு மிக மிக அவசியம். அவர்களின் கண்ணை பார்த்து, மிக்க மகிழ்ச்சி வெளிப்பட பதில் சொல்ல வேண்டும் என்பதை உணர்கிறேன். பத்திரிக்கை படித்தவாறு ஒற்றை மொழியில் பதில் சொல்வதை தவிர்பேன். என்பொருட்டு அவர் நன்றி சொல்வதை விட்டு, இத்தனை காலம் அவரின் சின்ன சந்தோசத்தை நிறைவேற்றிட முன்வராமல் இருந்ததற்காக வருத்தபடுகிறேன். இன்று முதல் அவர்களின் சந்தோசத்திற்காக என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்.

அவர்கள் முதியவர்கள் என்பதற்காக அவர்களின் எல்லா ஆசைகளையும், இனியும் பேர குழந்தைகளை எண்ணி விட்டுவிட வேண்டியதில்லை. அவர்கட்கும் நியாயமான ஆசைகள் நெஞ்சத்தில் உண்டு.

அக்கறையோடு பெற்றோரை காத்திடுங்கள். உங்கள் பெற்றோர் விலைமதிக்க முடியாதவர்கள்!

0 கருத்துரை இடுக ...: